2019ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சற்றே கட்டுக்குள் வர ஆரம்பித்தது. அதன் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 கோடி பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், மீண்டும் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்85 சதவீதத்தைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. எனவே நாக்பூரில் மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 17ம் தேதி அன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவைப் போலவே பிற மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாமா? அல்லது வேறு ஏதாவது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.