சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை!

Photo of author

By Rupa

சுற்றுலா: சுருளி அருவியில் சுத்தமில்லை, வசூல் நடத்தியும் வசதியில்லை!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மாவட்டம் அணைகளும் அருவிகளும் பசுமையும் நிறைந்த பகுதி. குறிப்பாக வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி, சின்னச் சுருளி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இதில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலையில் உருவாகும் சுருளி அருவி வனப்பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகளைத் தழுவி வருகிறது. இதன் காரணமாக இந்த நீரைத் தீர்த்தமாகக் கருதி, பிறபகுதிகளில் கோயில் கும்பாபிஷேகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து வரும் நீர் எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது.
சங்க இலக்கியக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ள சுருளி அருவி பகுதியில் சித்தர்களும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனாலோ என்னவோ இப்பகுதியைச் சுற்றி சிவன், ஐயப்பன், அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. ஆன்மிகச் சுற்றுலா வரும் பயணிகள் இந்த அருவிக்கு வருகை தர மறப்பதில்லை.
கம்பத்திலிருந்து பச்சைப் போர்வை போர்த்தியது போன்றிருக்கும் வயல்வெளிகள், திராட்சைத் தோட்டங்கள், தென்னைத் தோப்புகளுக்கு ஊடாக 9 கி.மீ பயணித்துச் சென்றால் குட்டிக் குற்றலாம் என அழைக்கப்படும் சுருளி அருவியின் அடிவாரப்பகுதியை அடைந்துவிடலாம்.
கம்பம் சுருளிப்பட்டி ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட செக்போஸ்ட்டில் நுழைவுக்கட்டணம் எனக் கூறி பைக்குகளுக்கு 10 ரூபாயும், கார்களுக்கு 20 ரூபாயும், வேன்களுக்கு 30 ரூபாயும், பஸ்களுக்கு 60 ரூபாயும் வசூலிக்கின்றனர். அதைக்கடந்து உள்ளே சென்றால் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டில் பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறுவர்களுக்கு 20 ரூபாயும் வசூல் செய்கின்றனர்.
ஓங்கி உயர்ந்த மரங்களைக் கொண்ட அடர்வனத்துக்குள் மேடு பள்ளம் நிறைந்த 2 கிலோ மீட்டர் பாதையில் சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் பலரும் மேடான பகுதி என்பதால் நடக்க முடியாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருந்தனர். பாதையின் இருபுறம் சோப்பு, ஷாம்பு, திண்பண்டங்கள், உணவுப் பொட்டலங்களின் குப்பை சிதறிக்கிடக்கிறது. மேலும், குளித்துவிட்டுக் கிளம்புவோர் தங்களின் பழைய உடைகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் பழைய துணிகளின் குவியலும் அதிகமாக உள்ளது.
வனத்துறை, போலீஸார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் அவரவர் கார்களில் வனத்துறை செக்போஸ்ட்டில் இருந்து அருவி வரை செல்கின்றனர். இவர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி கொடுக்கிறீர்கள் எனப் பயணிகள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போதே, ராயப்பன்பட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ. முருகன் தனது சொந்த காரில் உள்ளே சென்றார்.
அருவியில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறை செக்போஸ்ட் அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளில் குளியலுக்கான அனைத்துப் பொருள்களும் தாராளமாக விற்கப்படுகின்றன. இதையும் வாங்கிச் சென்று அருவியில் குளிப்போரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
மதுரையில் இருந்து தனது குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணியான கோபாலிடம் பேசினோம். “அருவியில் பெண்கள் நிம்மதியாகக் குளிக்க முடியாத நிலை உள்ளது. குடிபோதையில் வரும் இளைஞர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. பராமரிப்பு எனக் கூறிப் பணம் பெறுகிறார்கள். அவர்கள்தானே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குளிக்க வருவோரை முறைப்படுத்தி உள்ளே அனுப்பி வெளியேறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்குக் கூட முறையாக அறைகள் இல்லை. சில அறைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவற்றில் கதவுகளும் தாழ்ப்பாள்களும் இல்லை. அதையும் மீறி உள்ளே செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. காரணம், உள்ளே துணிக் குவியல்களால் அறையில் துர்நாற்றம் வீசுகிறது.
தீர்த்த அருவி என அழைக்கப்படும் இதில் குளித்தால் நல்லது என்பதால் என் அம்மாவையும் அழைத்து வந்திருந்தேன். அவரால் நடக்க முடியவில்லை. அவரை அருவி வரை அழைத்துவரவே மிகவும் சிரமப்பட்டுவிட்டோம். வனத்துறையால் வாகனம் இயக்கப்பட்டால் முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் அதற்கும் கட்டணம் கொடுத்து வரத் தயாராக இருப்பார்கள். அதேபோல குடிநீர், கழிப்பறை வசதியும் இல்லை” என்றார்.சீசன் காலங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடம் இவ்வளவு மோசமாக உள்ளதே எனவும், இவ்வளவு தூரம் இனிமேல் நடக்கமுடியாது எனவும் மூத்தகுடிமக்கள் வருந்துவதைப் பார்க்க முடிந்தது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் பேசினோம். ’வனத்துறை சார்பில் வாகனம் இயக்க ஏற்பாடு செய்ய உள்ளோம். போதிய ஆட்கள் இல்லாததால், அருவிக்குச் செல்வோரை முறையாக சோதனைக்கு உட்படுத்த முடியவில்லை, அருவியில் குளிப்பவர்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை. விரைவில் போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.