மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?
வரலாற்றை திருப்பி பார்த்தால் மாவட்டங்கள் உருவான கதையை அறிய முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மாகாணமாக இருந்த மதராஸ் பின்னர் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலமாக முளைத்தது.
ஆரம்பத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காலப்போக்கில் 32 ஆக பிரிந்தது. பெரிய மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் தனி மாவட்டங்களாக மாறியது.
நீண்ட காலமாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, திருநெல்வேலியில் இருந்து தென்காசி, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகையில் இருந்து மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளை பிரித்து மாவட்டம் என்ற அந்தஸத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல்லில் இருந்து பழனி, ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டிபாளையம், திருவண்ணாமலையில் இருந்து ஆரணி, கடலூரில் இருந்து விருத்தாச்சலம், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்த வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கும்பகோணம், பழனி, கோபிச்செட்டிபாளையம், பொள்ளாச்சி, ஆரணி, கோவில்பட்டி, விருத்தாச்சலம் ஆகிய முக்கிய நகரப் பகுதிகளை புதிய மாவட்டங்கள் என்று கூடிய விரைவில் அரசு அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நடந்தால் 38ல் இருந்து 45 மாவட்டங்களை கொண்ட பலம் வாய்ந்த மாநிலமாக தமிழகமாக உருவெடுக்கும்.