தாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!

0
167

தனியார் பால் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பால் வாகனத்திலேயே காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக செல்லும் பொழுது தாயின் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜமான் (22). இவர் சமீபகாலமாக கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை மதியம் கீரமங்கலம் பகுதியில் கடைவீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ராஜமான் , பிரதான சாலையை கடக்க முயன்றபோது கீரமங்கலத்தில் இருந்து கை காட்டி நோக்கி வந்த தனியார் பால் வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.

விபத்தில் காயமடைந்த ராஜமானை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு அழைத்தனர் .ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே காயம் அடைந்தவரை ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனைக்கு மீண்டும் ஆம்புலன்ஸ் இல்லாமல் தனியாக காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் விபத்து குறித்து தகவல் அறிந்த தாயார் அவரது மடியில் படுக்க வைத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜமான் தன் தாயின் மடியிலேயே உயிர் பிரிந்து, சோகத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கீரமங்கலம் பகுதியில் மக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ், கடந்த சில மாதமாக கொரோனா பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததால், விபத்துக்கள் ஏற்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனது.பொதுமக்களே தனியார் வாகனம் மூலம் ஏற்பாடு செய்யும் நிலையை அரசு கருத்தில் கொண்டு ஆம்புலன்சுக்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K