வரலாற்றை மாற்றிய திருநங்கை..! – அப்படி என்ன செய்தார்..?

Photo of author

By CineDesk

வரலாற்றில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு என மதரஸா பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள் என்றாலே கைத் தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். காரணம் ஆணாக பிறந்து பெண் உணர்வுகளால் பெண்ணாகவே மாறும் ஒருவரை இந்த சமூகமும், உறவினர்களும் புறக்கணிப்பதால் அவர்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். தற்பொழுது திருநங்கைகள் மீதான இழிவான பார்வை மாறி அவர்களும் சமூகத்தில் மரியாதையுடன் வாழ பழகிக் கொண்டு வருகின்றனர். மருத்துவம், காவல்துறை, நீதித்துறை என அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் தங்களுக்கான அடையாளத்தை பதித்து வருகின்றனர்.

உலகின் சில நாடுகளில் திருநங்கைகளுக்கு என தனி அங்கீகாரம் அளித்து பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மூன்றாம் பாலித்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், அரசுப்பணியில் பங்கேற்கும் உரிமையும் அளிக்கப்பட்டுள்ளன. திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக மாறி வருகிறது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே, வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு என தனியாக இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் பயிலும் பள்ளிக்கூடம் இஸ்லாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பள்ளிவாசல்களுக்கு செல்லவும், அங்கு தொழுகை நடத்தவும் இஸ்லாம் மதத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அப்படி இருக்க பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய பள்ளிக்கூடும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்த பள்ளிக்கூடத்தை 34 வயதான ராணி கான் என்பவர் நிர்வகித்து வருகிறார். எல்லாரையும் போல் ஆரம்பக்கட்டத்தில் தனது 13வது வயதில் வீட்டினரால் புறக்கணிக்கப்பட்ட ராணி கான் 17வது வயதில் திருநங்கைகளுடன் சேர்ந்துள்ளார்.

முன்னதாக வீட்டிலேயே குரான் படிக்க கற்றுக் கொண்ட ராணி கான் கடந்த அக்டோபர் மாதம் தனியாக மதரஸா ஒன்றை நடத்த தொடங்கினார். துணிகளை தைத்து அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை கொண்டு இந்த மதரஸாவை அமைத்ததாக கூறும் ராணி கான் அங்கு 25பேர் படிப்பதாகவும், நிரந்தரமாக 8 பேர் தங்கி படித்து வருவதாகவும் தெரிவித்தார். அனைவரையும் போல் திருநங்கைகளும் சமூகத்தில் மதிப்புடன் வாழவும், கல்வி போன்றவற்றை பெறவும் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்து வருவதாக ராணி கான் தெரிவித்துள்ளார்.