ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?
சென்னை
கேசவ விநாயகத்தை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்கிறார்கள்.
யார் இந்த கேசவ விநாயகம்?
பாஜகவுக்கு என்று அரசியல் கோட்பாடு எதுவுமில்லை, ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் பாஜகவின் கோட்பாடும் என்று திராவிட கட்சிகள் விடாமல் பேசிவருகின்றன.
அதற்கேற்றார்போல், பிராமணிய தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மிக கவனமுடன் செயல்பட்டு வருகிறது பாஜக.
தமிழிசை சௌந்தரராஜன் முதல் எல்.முருகன், அண்ணாமலை வரை பிராமணர் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களே தலைமை பதவியை அலங்கரித்து வருகிறார்கள். இதற்கு காரணம் மதவாத முத்திரை தங்களது இந்துத்துவா என்ற கட்சி மீது விழுந்து விடாமல், மிக கவனத்துடன் பார்த்து கொண்டு வருகிறது பாஜக.
இது அத்வானி காலத்தில் இருந்தே இந்த நடைமுறை தான் இருந்து வருகிறது. வாஜ்பாய் என்ற மனிதரை மக்களிடம் முன்னிறுத்தி, அதற்கு பின்னால், கட்சியை வழிநடத்தியது முரளிமனோகர் ஜோஷியும், அத்வானியும் தான் என்பதை நாடறியும்.
இந்த நடைமுறை இப்போதும் தேவைப்படுகிறது.அதுவும் திராவிட மண்ணை காவி மண்ணாக்கும் முயற்சிக்கு, சற்று கூடுதலாக தேவைப்படுகிறது. ஆனால், தலைமைக்கு யார் வந்தாலும், கட்சியை தீர்மானிப்பதும், வழிநடத்தி செல்வதும் வேறு ஒரு ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தர்களாக இருப்பார்கள். இப்போதைக்கு அப்படி ஒரு ஆர்எஸ்எஸ் முக்கியஸ்தவர் தான் கேசவ விநாயகம்.
பாஜக அமைப்பு செயலாளர் ஆவார். திருமணம் செய்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் பிரமுகரான கேசவவிநாயகம், கமலாலயத்தில்தான் தங்கி இருக்கிறாராம். அங்கிருந்தபடியே பல்வேறு விவகாரங்களில் தலையிட்டும் வருகிறாராம். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பாஜக மூத்த தலைவர்களையே, ஓரங்கட்டி அண்ணாமலை சித்து விளையாட்டி விளையாடினால், அந்த அண்ணாமலைக்கே “செக்” வைக்கும் விதமாக செயல்பட்டு கொண்டிருப்பவர்தான் கேசவ விநாயகம் என்கிறார்கள்.
அண்ணாமலை ஒரு அறிவிப்பை செய்தால், அதை அசால்ட்டாக மாற்றக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக திகழ்கிறார் கேசவ விநாயகம் என்றும் சொல்கிறார்கள். காலம்காலமாகவே, பாஜகவை தன் கைப்பிடியில் ஆர்எஸ்எஸ் வைத்திருந்தாலும்கூட, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் கட்சியை வழிநடத்தினாலும்கூட, அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்த இந்த விஷயம், இப்போதுதான், ஓபனாக வெடித்து கிளம்பி உள்ளது. அதற்கு காரணம் திருச்சி சூர்யா.
“வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும்” என்று ஒரு முக்கிய மெசேஜையும் அண்ணாமலைக்கு சொல்லிவிட்டு போயுள்ளார் சூர்யா. ஏற்கனவே கேடி ராகவன் – மதன் ரவிச்ந்திரன் விவகாரத்திலும் கேசவவிநாயகத்தின் பெயர் பெரிதும் அடிப்பட்டது.
ஆனால், கேடி ராகவன் என்பவர் தமிழகம் அறிந்த புள்ளியாக அறியப்பட்டதால், கேசவ விநாயகத்தை பெரிதாக யாரும் அப்போது கண்டுகொள்ளவில்லை.
டெய்சி -சூர்யா சிவா ஆடியோ
சமீபத்தில் டெய்சி -சூர்யா சிவா ஆடியோ விவகாரத்திலும் இதே கேசவ விநாயகம் பெயர் மறுபடியும் அடிபடவும் தான், இவர் யார் என்ற கேள்வி பரவலாக எழ ஆரம்பித்தது. 2 நாட்களுக்கு முன்பு, டெய்சி தந்த ஒரு பேட்டியில், “கேசவ விநாயகம் முன்பு, ஒரு பெண் ஆடைகள் இன்றி நின்றால் கூட திரும்பி பார்க்க மாட்டார் என்று ஒரு கருத்தை சொல்லி, அதையும் பரபரப்பாக்கி விட்டார்.
டெய்ஸி இப்படி சொன்னதுமே, கடந்த 2 நாட்களாகவே கேசவ விநாயகத்தின் பெயர், சோஷியல் மீடியாவில் பலமாக அடிபட்ட நிலையில், இன்று அவரை பற்றி வெட்ட வெளிச்சமாக்கிவிட்டு போயுள்ளார் சூர்யா.
கேசவவிநாயகம் மீதான பல புகார்கள், தலைமைக்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்த முடிவு எதுவும் எடுக்கப்படாமலேயே உள்ளது. இப்போது, எதிர்ப்புகள் அவருக்கு கூடிவருவதாலும், கட்சிக்கு கெட்ட பெயர் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாலும், இதையே சாக்காக வைத்து விரைவில் அவரை பதவி நீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “கேசவ விநாயகத்தின் கதையை முடிக்க, திருச்சி சூர்யாவை பயன்படுத்தும் அண்ணாமலை! Next wicket யாரு?” என்று பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷை டேக் செய்து கேள்வி எழுப்பி இருப்பதையும், நம்மால் எளிதில் கடந்து சென்றுவிட முடியவில்லை.