தமிழக அரசியலில் திருப்பம்! காங்கிரஸுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் முக்கிய கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,பாஜக உள்ளிட்ட இதர கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை தொடர் இழுபறியில் உள்ளது.
இத்தகைய சூழலில் தமிழகம் வந்த பாஜக மூத்த தலைவர் அமித் ஷா ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பிறகும் பாஜக-அதிமுக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 18 தொகுதிகள் தரலாம் என்று பேசப்படுவதாகவும், பாஜகவோ 30 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இறுதியாக 24 முதல் 26 தொகுதிகள், அத்துடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் கொடுக்க பேசி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, அமித் ஷா ஈபிஎஸ்-ஓபிஎஸ் உடன் முதலில் 35 தொகுதிகளில் இருந்து பேசியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் 20 தொகுதிகளை பாஜக தன்வசம் வைத்துக் கொண்டு மீதமுள்ள 15 தொகுதிகளை டிடிவி தினகரனின் அமமுகவுக்கு கொடுக்க திட்டமிட்டுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும், தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய உளவுத்துறைகளின் ரகசிய அறிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்பதால், சசிகலா, தினகரனை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அதிமுக இரட்டை தலைமையிடம் அமித் ஷா அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ சசிகலா குரூப்புகளை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். இருப்பினும், அமித் ஷா உத்தரவின்படி, சசிகலா, தினகரனை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுகவும், பாஜகவும் எங்கள் தலைமையை ஏற்க சம்மதித்தால் கூட்டணியில் சேர்க்க தயார் என்றும், இணைந்து செயல்படத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.இதனால், திமுக கூட்டணியை விட்டு வெளியேறி மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம், அதனுடன் அமமுகவும் இணையலாம் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள டிடிவி தினகரன், “நிறையக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதனை வெளியில் சொல்வது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். கூட்டணி முடிந்தவுடன் அறிவிக்கிறேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் காங்கிரஸுடன் டிடிவி தினகரன் கூட்டணி ரகசியமாக பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கி விட்டார் என்றும், அதைத்தான் அவரது விளக்கம் சுட்டிக்காட்டுகிறது என்றும் கூறுகிறார்கள்.