அப்போது ஆதரவு இப்போது எதிர்பா? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன்!

0
119

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பபெட்ரோல் கெமிக்கல் முதலீட்டு மண்டலம் என்ற திட்டத்தை மத்திய அரசுடன் ஒன்றிணைந்து அதிமுக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள், அதோடு இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டது.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு சென்ற 26ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகை மாவட்டத்தில் பெட்ரோல் கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன தொகுப்பு ஒன்றை தயார் செய்வதற்கான ஏல அறிவிப்பு திட்ட அறிக்கை ஒன்றை தயார்ப்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்சமயம் அது போன்ற ஒரு திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது இருப்பது நல்லதல்ல என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோலிய கெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது என கூறியிருக்கிறார்.

மேலும் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் விவசாயத்திற்கு ஆதரவாளராக இருப்பதைப் போன்று காட்டிக் கொண்டு வசனம் பேசுவதையும், ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டத்திற்கு கையெழுத்துப் போடுவதும், திமுக அரசு வாடிக்கையாக கொண்டு இருக்கிறது என விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்த விதத்தில் தற்சமயம் வெளியிட்டு இருக்கக்கூடிய பெட்ரோல் கெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பை திமுக அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த பிரச்சினையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதோடு இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தில் இருக்கக்கூடிய குறைகளை சரிசெய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous article25 திருடர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! பிரேசில் பெரும் பரபரப்பு? நடந்தது என்ன ?
Next articleஅது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை! நீதிமன்றத்தில் பல்டி அடித்த அதிமுக நிர்வாகி!