அது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை! நீதிமன்றத்தில் பல்டி அடித்த அதிமுக நிர்வாகி!

0
75

கடந்த 2005ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 133 வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது அப்போது திமுகவினர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய காரை தீ வைத்து எரித்ததாக அதிமுக நிர்வாகி சந்தோஷ் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார். இதன் அடிப்படையில் தற்போதைய அமைச்சர்களாக இருக்கும் அன்பரசன், மா சுப்பிரமணியன், உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தா.மோ.அன்பரசன் மற்றும் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்றையதினம் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் 2005ஆம் வருடம் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு போடப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடிய இந்த வழக்கின் விசாரணையை ஆரம்பிக்கப்படவில்லை ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

காவல் துறை சார்பாக இந்த காரணங்கள் அனைத்தையும் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சந்தோஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அந்த சமயத்தில் வாக்குச்சாவடி முகவர் ஆக இருந்த நான் என்னுடைய காரை சைதாப்பேட்டை பாரதிதாசன் தெருவில் நிறுத்தி வைத்திருந்தேன். அன்றைய தினம் காலை 10 மணி அளவில் கார் தீப்பற்றி எரிந்தது என எனக்கு தகவல் வந்தது. கார் தீப்பிடித்ததற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. அரசியல் மற்றும் தேர்தல் பகையின் காரணமாக, தவறுதலாக மனுதாரர்களின் பெயரை குறிப்பிட்டு விட்டேன். தற்சமயம் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை இந்த வழக்கை ரத்து செய்வதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது என கூறியிருந்தார்.

எல்லா வாதங்களையும் கேட்டு கொண்ட நீதிபதி புகார்தாரர் கார் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை என தெரிவிக்கிறார், அரசியல் பகை காரணமாக, மனுதாரர்களின் பெயரை சேர்த்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆகவே அன்பரசன் மற்றும் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.