ஆளுங்கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக அக் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் அன்னை இந்திரா நகர் வாக்குச்சாவடியில் திமுகவினர், அமமுகவினர் மீது கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பி முத்தையா, கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பி.மகாலிங்கம் உள்ளிட்ட 11 கழகத் தொண்டர்கள் மற்றும் பெண்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளும் கட்சியினரின் அடாவடி செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமமுக தொண்டர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமும், காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்