ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும், முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார்.
ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இதனால் அதிமுகவில் இரண்டு பிரிவுகள் உண்டானது. இதில் சிலர் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்கள். இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது. அதுவெற்றி பெற்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், ஒருகட்டத்தில் பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்துக்குமே ஒத்து வரவில்லை. எனவே, ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார் பழனிச்சாமி. அதோடு சசிகலாவை, தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு கட்சியின் தலைமையாக மாறினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை அமைத்தது. இதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதல்வராகி விட்டார். கடந்த 4 வருட திமுக ஆட்சி சாதனை என திமுகவினர் சொல்லிக்கொண்டாலும் சோதனையான ஆட்சி என அதிமுக விமர்சனம் செய்து வருகிறது. மக்களிடம் சில அதிருப்திகளும் நிலவுகிறது. குறிப்பாக தமிழத்தில் தினந்தோறும் ஒரு ரவுடி கொலை சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது.
இந்நிலையில்தான் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன் தினம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ‘திமுகவை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிச்சாமியே பரவாயில்லை என சொல்லுமளவுக்கு இன்றைய நிலைமை மாறி வருகிறது. அதற்கேற்றார் போல் அவரும் திருந்துவார் என நம்புகிறோம். அமித்ஷா சிறந்த தலைவர். அவர் போட்டுள்ள எக்ஸ் தள பதிவுகள் உங்களுக்கு எல்லாவற்றையும் உணர்த்தும்’ என சொல்லியிருக்கிறார்.