கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் அறிவிக்கப்பட்டார்.
இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் ஏற்பட்ட வேட்பு மனு தொடர்பான பிரச்சனையில் ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து தற்போது டெல்லியில் உள்ள பாஜக மேலிட தலைவர்கள் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதால், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளதாக அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்நாடகா தேர்தலில் புலிகேசி நகர் வேட்பாளர் அன்பரசனை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் அன்பரசன் தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அவரது கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது பாஜகவுடன் வைத்திருக்கும் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதற்காகவே, வாபஸ் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுகிறது.