ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

Photo of author

By Vijay

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 புல் தர வேண்டும்: சட்டசபையில் எம்எல்ஏ முன்வைத்த பகீர் கோரிக்கை!

Vijay

கர்நாடக சட்டசபையில் நடந்த சமீபத்திய விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை போலவே, ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

கர்நாடக மாநில அரசு முதல்வர் சித்தராமையா தலைமையில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் கலால் வரியை ரூ.36,500 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான விற்பனை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி செய்யவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வும், சட்ட நிபுணருமான எம்.டி. கிருஷ்ணப்பா சட்டசபையில் உரையாற்றியபோது, கலால் வரியை கடந்த ஒரு ஆண்டில் மூன்று முறை உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். இதனால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை மேலும் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும், “மக்கள் குடிப்பதை தடுக்க முடியாது. உழைக்கும் வர்க்கத்தினரை கட்டுப்படுத்த முடியாது. மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் போன்ற பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல, ஆண்களுக்கும் வாரத்திற்கு இரண்டு மதுபாட்டில்கள் வழங்க வேண்டும்,” என அவர் கூறினார்.

இந்த கூற்றிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டசபையில் பதிலளித்த கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், “நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த பிறகு இதை செய்யுங்கள். ஆனால் தற்போது, மக்களை குடிக்க விடாமல் தடுக்க வேண்டியது நமது கடமை,” என்று தெரிவித்தார்.

இதேபோல, கடந்த ஆண்டு கர்நாடக அரசும் மதுபான வரியை அதிகரித்தது, அதன் பிறகு மதுபான விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இதனால் மதுபானக் கடைகள், பார்கள் வருவாய் இழந்ததாகப் புகார் தெரிவித்தன. மேலும், மதுவரி அதிகரிப்பால் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. “ஆண்களின் நலனுக்காக இலவச வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மதுபானத்துடன் நலத்திட்டங்களை ஒப்பிடுவது குற்றம்,” என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சட்டசபையில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.