மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.
இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் இப்படி மாணவர்களை அமர வைக்க வேண்டும். அப்போது தான் யார் முன் வரிசை, யார் பின் வரிசை என்கிற பாகுபாடு மனப்பான்மை மாணவர்களுக்குள் வராது என்கிற கோணத்தில் இந்த ப வடிவ முறையை பள்ளி வழக்கத்திற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
உண்மையில் இந்த முறையை அமல்படுத்துவதால் நிச்சயம் மாணவர்களுக்கு இடையே உள்ள பாகுபாடு மனப்பான்மை முற்றிலும் குறைந்துவிடும். ஆனால் அதைவிட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாணவர்களுக்கு நிறைய பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
தொடர்ச்சியாக தினமும் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் இந்த மாதிரி அமர்ந்திருந்தால் குழந்தைகளின் கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்திருக்கும் மாணவர்கள் தங்களின் கண்ணாடி லென்ஸ் வழியாக பார்க்காமல் பக்கவாட்டின் வழியாக பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும். தலை வலி, கழுத்து வலி பிரச்சனைகள் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து இதே மாதிரி அமர்ந்திருப்பதால் கழுத்து மற்றும் கண்கள் பாதிப்படைய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு பேசுறமே, நம்மால் தொடர்ந்து ஒரு படத்தை டீவியில் பக்கவாட்டில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள்.