கோடைகால நோய்களை விரட்டியடிக்கும் உச்சன காளி அம்மன் – பழங்குடியின மக்களின் பழமைமாறா வழிபாடு!!
கோடைகாலம் என்றாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள தெம்பட்டி என்னும் கிராமத்தில் உச்சன காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை எட்டூர் காளி என்றும் அங்கு வசிக்கும் படுகூர் இன மக்கள் அழைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த அம்மன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 15 கிராமங்களின் குலதெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
ஒருவார கால திருவிழா
இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் அப்பகுதி மக்கள் ஒருவார காலம் திருவிழா எடுத்து நடத்துவர். இறுதி நிகழ்வான நீராட்டு வழிபாடு செய்து முடித்தால் இந்த தெய்வம் மனம் குளிர்ந்து தனது பக்தர்களுக்கு அம்மை போன்ற கோடைக்கால நோய்கள் வராமல் தடுப்பால் என்பது நம்பிக்கை. இந்தாண்டு கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் காரணத்தினால் வெறும் 2 நாட்கள் மட்டுமே திருவிழா நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த காளியம்மன் பல்லக்கில் பவனி வருவாள் என்பதால் சிறப்பு பூஜைகள், கரகம், நீராட்டு என திருவிழா கோலாகலமாக நடத்தப்படும்.
கோவிலில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தினர். சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இத்திருவிழா குறித்து பேசிய அப்பகுதி மக்கள், ‘உச்சன காளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். கோடைகால கொள்ளை நோய்களில் இருந்து எங்களை காத்தருள்வாள். அதனால் தான் திருப்பணிகள் நடந்தாலும் 2 நாட்கள் திருவிழா நடத்தி அம்மனை குளிர்வித்தோம்’ என்று கூறினர்.