“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னை சின்னவர் என்று அழைக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டது விவாதங்களை எழுப்பியது.
திமுகவில் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின்தான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அமைச்சர்கள் அடிக்கும் பேனர்களில் கூட ஸ்டாலின் படத்துக்குப் பிறகு உதய்யின் படம் இடம்பெறுகிறது. மேலும் பலர் அவரை மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் பட்டப்பெயர் கொடுத்து அழைத்து வந்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி “என் மீது கொண்ட அன்பு காரணமாக திமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை மூன்றாம் கலைஞர் என தெரிவிக்கிறார்கள். இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் அது வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே தெரிவிக்கிறேன். மூன்றாவது கலைஞர், இளம் தலைவர், என்று அழைப்பதில் எனக்கு துளிகூட உடன்பாடு கிடையாது. கலைஞர் என்றால் அது கலைஞர் மட்டும்தான்.
ஆகவே என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம், சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் இருப்பதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசும்போது “என்னை சின்னவர் என்று அழைத்தால் அதுவும் விவாதமாகிறது. பலர் வயிற்றெரிச்சல் அடைகின்றனர். அதனால் சின்னவன் என்று அழையுங்கள். நான் உங்கள் எல்லோரையும் விட சின்னவன்தான்” எனக் கூறியுள்ளார்.