உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்
சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும்த இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், வட மாநிலங்களிலும் கூட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு விதங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவும், அவர்களை கண்டித்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நேதாஜி சிலை முன்பு மதுரை மாவட்டம் இந்து முன்னணி அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பின் மதுரை மாவட்ட மாநகர் தலைவர் செல்வ கணேஷ் ஜி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அத்துடன், போராட்டத்தில் செல்வகணேஷ் ஜி உள்ளிட்ட சில நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு செருப்பால் அடித்து, அடித்து கோபத்தை வெளிப்படுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
“என் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொளத் தயார்” என்று ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது