ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Photo of author

By Parthipan K

ரஷிய அதிபர் புதினை நேரடியாக சந்திக்க தயாராக உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா இன்று 28-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து துருக்கியில் கடந்த 10ஆம் தேதி இரு நாடுகளின் உயர்மட்டக்குழு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதையடுத்து உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால சிறப்பு அமர்வு கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெறுகிறது. இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினை சந்திப்பது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதினுடன் நான் நேரடியாக பேசத் தயாராக உள்ளேன். புதினை நான் சந்திக்காத வரையில், ரஷியா போரை நிறுத்த விரும்புகிறதா என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும், பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.