சீரமைக்கப்படாத தொட்டி பாலம்! பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை!
தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றளவும் சீரமைக்க படாமல் உள்ளதால் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பதினெட்டாம் கால்வாய் பகுதி விவசாயிகள்.
முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் சுற்றுப்புற பகுதிகள் பாசன வசதி பெறுவதற்காக, 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் பெருகுவதோடு, நேரடியாக 4, 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் லோயர்கேம்ப் அருகே உள்ள தலை மதகில் இருந்து மானாவாரி பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், 18 ம் கால்வாயில் அதிக தண்ணீர் சென்றது.கம்பம் பகுதியில் இருந்து தேவாரம் பகுதிக்கு செல்லும் 18ஆம் கால்வாய் பகுதியின் நீர் வழித்தடத்தில், கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொட்டிப்பாலம் உள்ளது. இந்த தொட்டிப் பாலத்தின் வழியாகவே 18ம் கால்வாய் நீர் கோம்பை பண்ணைபுரம், தேவாரம் பகுதிக்குச் செல்லும்.
உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 18ம் கால்வாயில் தண்ணீரோடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காட்டாற்று வெள்ளம் கால்வாயில் கலந்த மழை வெள்ளம், 18ஆம் கால்வாய் வழித்தடத்தில் ஓடியது. இதனால் 18-ம் கால்வாய் நீர் வழித்தடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கினால் கம்பம் அருகே உள்ள தொட்டி பாலம் உடைந்து வெள்ள நீர் அடித்துச் சென்றது ..இதனால் 18ம் கால்வாய் வழித்தடத்தில் நீர் நிறுத்தப்பட்டது..
இதனால் தேவாரம் பகுதியில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பாததால் கடந்த ஆண்டு மானாவாரி விவசாயிகள் சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது உடைந்த தொட்டி பாலம் இன்றளவும் சரி செய்யப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது முல்லைப் பெரியாற்றில் 131 கன அடி தண்ணீர் உள்ள நிலையில் இந்தாண்டு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தொட்டிப் பாலம் சரி செய்யப்பட்டால் தான் கோம்பை பண்ணைப்புரம் போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
பொதுப்பணித் துறையினர் விரைந்து பதினெட்டாம் கால்வாய் உடைந்த தொட்டி பாலத்தை சரி செய்யவில்லை என்றால் போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 35 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்படும் எனவும், நிலத்தடி நீர் வற்றி போகும் எனவும், கால்நடைகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பாக போடிநாயக்கனூர் பகுதி முற்றிலும் பாலைவனமாக மாறும் என்கின்றனர் பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தொட்டி பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் ,மேலும் மழைக்காலங்களில் 18 ம் கால்வாயில் திறந்து விடும் தண்ணீரை தாமதிக்காமல் விரைவாக திறந்துவிட வேண்டும் என பதினெட்டாம் கால்வாய் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.