மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததால் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டோர்ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார்.
இதற்காக நாடு முழுவதும் 10,000 அரசு தடுப்பூசி நடுவங்களும், 20,000 தனியார் தடுப்பூசி நடுவங்களும் அமைக்கப்படும் என்ற அவர், அரசு நடுவங்களில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், கட்டண விவரங்கள் குறித்து தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் ஆலோசித்து 2 அல்லது 3 நாட்களில் நடுவண் நலவாழ்வுத்துறை முடிவெடுக்கும் என்றார்.