ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பை நீக்கிய – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !
தமிழக தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியதற்கு பாடலாசிரியர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொடர்ச்சியாக அரசியல் தலைவர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்து பீதியைக் கிளப்பி வருகிறது. இதற்கு முன்னதாக சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்கியது கண்டனக்குள்ளானது.
அதன் பின்னர் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் மற்றும் ஒய் பிளஸ் சிறப்பு பாதுகாப்பை நீக்கியுள்ளனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக அனுதாபியான பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது. ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வைரமுத்துவுக்கு நடக்க இருந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இருந்த பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கலந்து கொள்ள விடாமல் பாஜகவினர் தடுத்தனர். ஆண்டாள் பற்றி வைரமுத்து கருத்து தெரிவித்ததில் இருந்து பாஜகவினருக்கு வைரமுத்துவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.