ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார்.
விருதுநகர்: சங்கரன்கோவில் தாலுகா பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 38). ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே தனியார் மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் ராஜதுரை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் இன்றும் பணியாளர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்திற்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். கரிசல்குளம் அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் ராஜாதுரை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.