ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குறைவான தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் திமுகவுடன் இழுபறி நிலவியது. ஆனால் தொகுதியை தான் குறைவாக பெற்றுக்கொண்டோம்… கேட்ட தொகுதிகளையாவது கொடுங்கள்… என ஸ்ட்ரிட்டாக பேசி நினைத்ததை சாதித்தது காங்கிரஸ்.
தொகுதிகள் எவை என தெரியவந்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடிக்க ஆரம்பித்தது. அதை எல்லாம் சரி செய்து கொண்டிருந்தால் தேர்தலே முடிந்துவிடும் என முடிவு செய்த காங்கிரஸ் தலைமை 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. ஏற்கனவே கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், ஜோதி மணி ஆகியோர் சரமாரியாக விளாசி வரும் நிலையில், திருநாவுக்கரசர், இளங்கோவன் ஆகியோரது மகன்களுக்கு வேறு சீட் வழங்கப்பட்டது உச்சகட்ட புகைச்சலை கிளப்பியது.
மேலும் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை. விளவங்கோட்டில் விஜயதாரணி, குளச்சலில் பிரின்ஸ் ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த போதும், அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதற்கு காரணம் கட்சியில் சில நிர்வாகிகள் அவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என போர்க்கொடி தூக்கியதால் தானாம். நீங்க என்ன எனக்கு சீட் கொடுக்குறது, போறேன் டெல்லிக்கு… என கிளம்பிய விஜயதாரணியையும் தடுத்து நிறுத்திய தமிழக காங்கிரஸ் தலைமை. எதுவாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளலாம் என சமாதானம் செய்துள்ளனர்.
குஷ்பு எப்படி கட்சிக்கு உழைத்தும் மதிப்பில்லை என காங்கிரஸை விட்டு பாஜகவிற்கு தாண்டினாரோ? அதே போல் விஜயதாரணியும் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் தீயாய் பரவின. பாஜக தரப்பிலும் விளவங்கோடு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் ஒருவேளை அவர் அக்கட்சியில் இணைந்தால் அந்த தொகுதி வேட்பாளராக அவரையே கூட பாஜக அறிவிக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை முற்றிலும் வதந்தி என மறுத்துள்ள விஜயதாரணி, இன்னும் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை அறிவிக்கவில்லை, அத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அவா்களின் கருத்து என்ன என்பதுதானே முக்கியம். இதை தலைமை அறியாமலா இருக்கும். எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் தலைமை தரும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.