பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி – அரசியலில் பரபரப்பு!

Photo of author

By Vijay

பாஜகவுடன் சகவாசமா? அதிமுகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட முக்கிய புள்ளி – அரசியலில் பரபரப்பு!

Vijay

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிலுவை நிதியை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே விடுவிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன, ஆனால் தமிழ்நாடு ஏன் ஏற்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார்.

மும்மொழிக் கொள்கை மற்றும் எதிர்ப்பு

தர்மேந்திர பிரதானின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்டவை, இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என மத்திய அரசை கண்டனம் தெரிவித்தன. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாட்டை கடந்து சென்றால் மக்கள் இந்தியில் திட்டுவார்கள் என்கிற கருத்தை வெளியிட்டார். அதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பார்டர் தாண்டினால் சாப்பிட்டு தான் ஆக வேண்டும்” என்ற கருத்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவில் இந்தி திணிப்பு காரணமாக 26 மொழிகள் அழிந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், “ரூ.2,000 கோடி நிதி என்ன, ரூ.10,000 கோடி கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போட மாட்டேன்” என்று உறுதியாக அறிவித்தார். இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்து போட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாரின் நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக, கட்சியின் ஒழுங்குமுறைக்கு எதிராக நடந்துகொண்டதற்காக, கட்சியின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக,
விஜயகுமாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், கட்சி உறுப்பினர்கள் அவருடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது எனவும் அறிவித்தார்.

விஜயகுமாரின் விளக்கம்

இதுகுறித்து, விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினர் மிகுந்த அழுத்தம் கொடுத்ததால் தான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டதாகவும், அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.