இன்னும் விசாவே எடுக்கலயா?… சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்… அதிர்ச்சி தகவல்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது நடந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது டி 20 போட்டி நடந்த நிலையில் அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெக்காய் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளது.
இந்த தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் நிலையில் தற்போது வரை வீரர்களுக்கான விசா எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் அமெரிக்காவுக்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இப்போது பிசிசிஐ யும் இணைந்து விசா எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை விசா கிடைக்கவில்லை என்றால் வெஸ்ட் இண்டீஸிலேயே அந்த போட்டிகள் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.