தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?

Photo of author

By Mithra

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுகாதாரத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடைகள் வணிக நிறுவனங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும், இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. அரசு அனுமதித்துள்ள நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வெளியே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை கடைகள், வணிக நிறுவனங்கள், காவல்துறையினர் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஓரளவுக்கு கட்டுப்பாடுடன் பொதுமக்கள் வெளியே செல்வார்கள்.

அடுத்த 12 நாட்கள் இந்தக் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் வெளியே சென்றாலும், அதற்கு அடுத்த நாள், அதாவது மே 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று ஊரடங்கு விதிமுறை பொருந்தாது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அன்றைய தினம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அப்போது, எவ்வளவு துணை ராணுவமும், காவல்துறையும் குவிக்கப்பட்டாலும், அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்தவே முடியாது.  அன்றைய தினம், மீண்டும் தமிழகம் திருவிழா போல் காட்சி அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஊரடங்கு விதிப்பின் முக்கிய நோக்கமே, தொற்று பரவலைத் தடுக்கத்தான். ஆனால், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது கட்டுக்கடங்காத கூட்டம், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கும் என்பதால், இந்த 12 நாட்கள் கட்டுப்பாடுகளும் செயலற்று போகும் நிலையே உள்ளது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி, பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என பலர் பாராட்டியுள்ளனர். இந்த நேரத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது, கட்சியினர் குவிவதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.