அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்கு காத்திருப்பு – திமுக எம்பி இளங்கோவன்!!
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாள் முதல் திமுகவை கடுமையாக சாடி வருகிறார். மேலும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் ஊழல் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என அண்ணாமலை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ரபேல் வாட்ச் சம்பந்தமாக இருவருக்கும் கடுமையான வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைந்தது, இதனை தொடர்ந்து அண்ணாமலை தமிழக மின் வாரியத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டினார், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சவால் விடுத்தார். இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் பதினான்காம் தேதி செந்தில்பாலாஜி மற்றும் திமுகவில் உள்ள முக்கியமான அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி இளங்கோவன் நேற்று திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் கூறும்போது, அண்ணாமலை கூறியது போல் அவர் வெளியிடும் பட்டியலுக்காக காத்திருப்பதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இபிஎஸ், ஓபிஎஸ், ஆகியோர் ஊழல் பட்டியலையும் இதனுடன் சேர்த்து வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.
அண்ணாமலை கூறியது போல அவர் வெளியிடும் ஊழல் பட்டியலில் யார் யார் பெயர்கள் இடம் பெறப் போகிறது எனவும், திமுக எம்பி இளங்கோவன் கூறியது போல அதிமுகவை சேர்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு வரும் 14ம் தேதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.