அதிக இனிப்பு சுவை கொண்ட வெல்லம் கரும்பு சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கரும்பு சாறை பிழிந்து பாகு காய்ச்சினால் அவை வெல்லமாக நமக்கு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகை அன்று தான் வெல்லம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக சிலர் அதிக லாபம் ஈட்ட வெல்லத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.சாமானிய மக்களுக்கு வெல்லத்தில் உள்ள கலப்படத்தை கண்டறிவது கடினமான இருக்கலாம்.ஆனால் இங்கு சொல்லப்பட உள்ள சில அறிகுறிகளை வைத்து ஒரிஜினல் வெல்லம் மற்றும் கலப்பட வெல்லத்தை சுலபமாக கண்டறிந்துவிடலாம்.அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெல்லத்தில் செயற்கை நிறம் மற்றும் தூசுகள் போன்றவை கலக்கப்படுகிறது.
வெல்லத்தில் கலப்படம் இருப்பதை கண்டறிய வழிகள் இதோ:
1)கலப்படம் இல்லாத வெல்லத்தின் நிறம் பழுப்பு அல்லது தங்க நிறத்தில் இருக்கும்.அதுவே அதிக பளபளப்புடன் வெல்லம் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெல்லத் துண்டுகளை போட்டு பரிசோதிக்கலாம்.
2)சில வியாபாரிகள் வெல்லத்தின் எடையை அதிகரிக்க கரும்பு பாகில் சாக் பவுடர் கலக்கின்றனர்.அதேபோல் சிலர் சலவைத் தூள் சேர்த்து கரும்பு பாகு காய்ச்சுகின்றனர்.இதுபோன்ற கலப்படத்தை கண்டறிய ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரையவிடுங்கள்.தண்ணீரில் கசடுகள் படிந்தால் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
3)கலப்படம் இல்லாத வெல்லத்தை தொட்டால் ஒருவித பிசுபிசுப்பு தன்மையை உணரமுடியும்.இந்த வெல்லத்தை சுலபமாக உடைக்க முடியும்.அதுவே கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் கல் போன்று இருக்கும்.இதை எளிதில் உடைக்க முடியாது.
4)வெல்லத்தை வாங்குவதற்கு முன் சிறிது சுவைத்து பார்க்க வேண்டும்.வாயில் வெல்லத்தை வைத்ததும் அதிக மணம் வீசுவதோடு எளிதில் கரைந்துவிடும்.இப்படி இருந்தால் அது சுத்தமான வெல்லம் என்று அர்த்தம்.வெல்லத்தை சாப்பிடும் பொழுது இரசாயன வாடை வந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் என்று அர்த்தம்.