குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?? பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்..!!

Photo of author

By Janani

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?? பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்..!!

Janani

ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண் என்பவள் எப்படி இருக்கிறாள் என்பதை வைத்து தான் அந்த குடும்பம் எப்படி, அவர்களுடைய பாரம்பரியம் எப்படி என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள். அந்தப் பொறுப்பையும் நமது முன்னோர்கள் பெண்களிடத்தில் தான் வைத்துள்ளார்கள்.

குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் இந்த முக்கியமான ஆறு விஷயங்களை கடைப்பிடித்தார்கள் என்றால் அந்த குடும்பமும் அந்தப் பெண்ணும் நிச்சயம் சந்தோசமாக இருப்பார்கள்.

1. சுறுசுறுப்பாய் இருங்கள்:

தினமும் காலை எழுந்ததும் மங்களகரமாக குளித்துவிட்டு பெண்கள் சுறுசுறுப்பாக காலை நேரத்தில் இருக்க வேண்டும். அதற்குள் விடிந்து விட்டதா? என்று சோம்பேறித்தனமாக எழுந்திருக்காமல், உற்சாகத்துடன் எழுந்து சுறுசுறுப்பாக அந்த நாளை துவங்க வேண்டும்.

பெண் என்பவளுக்கு முக்கியமாக இருக்க வேண்டியது சுறுசுறுப்பு தான். சோம்பேறித் தனம் என்பது சிறிதும் இருக்கக் கூடாது. பெண் என்பவள் முதலில் தன்னை பாதுகாத்து, பிறகு தன்னை கொண்டவனை பாதுகாத்து, அதன் பிறகு இந்த உலகத்தையே பாதுகாக்க கூடிய வல்லமை என்பது பெண்ணுக்கு தான் உள்ளது. எனவே பெண்கள் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று வள்ளுவர் தனது திருக்குறளின் வாயிலாகவும் கூறியுள்ளார்.

2. நல்ல ஆடைகளை அணியுங்கள்:

நமது நாட்டின் பாரம்பரிய உடை என்பது புடவை தான். ஆனால் இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு பாரம்பரிய புடவை எது? என்று கேட்டால் நைட்டி என்று சொல்லக்கூடிய காலம் வந்துவிடும். நைட்டி என்பது ஒரு இரவு உடை. ஆனால் இன்றைய நாட்களில் அனைத்து நேரங்களிலும், அனைத்து நாட்களிலும் இந்த நைட்டியை தான் பெண்கள் பெரும்பாலும் அணிந்து இருக்கின்றனர்.

பெண் என்பவள் மகாலட்சுமி போன்று இருக்கிறாள் என்பதை அவளுடைய குணம், முக அழகு, மற்றும் உடை அழகை வைத்து தான் கூறுவார்கள். ஆனால் இதற்காக அனைத்து நேரங்களிலும் புடவையில் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அதற்கு பதிலாக சுடிதார் இது போன்றவைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் இரவு உடையை பகல் நேரங்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது.

3. விளக்கேற்றி இறைவனை வழிபடுங்கள்:

அதிகாலை எழும் பொழுது சுறுசுறுப்பாக எழுந்து குளித்துவிட்டு, மங்களகரமான ஆடைகளை அணிந்து கொண்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பாக தினமும் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும்.

ஒரு வீட்டில் மங்களகரமான விளக்கு என்பது காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் ஏற்றும்பொழுது, வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அகன்று, மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக அந்த வீட்டிற்கு கிடைக்கும்.

4. இனிய வார்த்தைகள் பேசுதல்:

பெண்கள் எப்பொழுதும் அமங்கலமான வார்த்தைகளை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் மங்களகரமான வார்த்தைகளை மட்டும் தான் பேச வேண்டும். அது மட்டும் அல்லாமல் பெண் என்பவள் பேசும் பொழுது அவளது வார்த்தையில் ஒரு நிதானம், அமைதி என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு பெண் பேசுகிற பொழுது, எதிரே இருப்பவர் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். குடும்பத் தலைவி என்கின்ற பதவிக்கு ஏற்ப, தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட தீர்க்கும் விதமாக பெண்களின் பேச்சு இருக்க வேண்டும்.

5. சிரித்த முகத்துடன் இருங்கள்:

வீட்டிற்கு வருபவர்களிடம் பேசி வரவேற்பதை விட, சிரித்து முகத்துடன் வரவேற்பதே நன்றாக இருக்கும். வீட்டிற்கு உள்ளே நமது உறவினர்கள் நுழையும் பொழுது, அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணின் முகத்தில் இருக்கக்கூடிய சிரிப்பு என்பது மிகவும் அவசியம்.

மற்றவர்களை வரவேற்கும் பொழுது மட்டும் இந்த சிரிப்பை காட்டுவது மட்டும் அல்லாமல், வீட்டில் மற்ற நேரங்களிலும் முகத்தை கடுகடுவென வைத்து இருக்காமல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பது லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

6. சுத்தமாய் இருங்கள்:

சுத்தம் என்பது மனது சுத்தம், உடம்பு சுத்தம், சுற்றி இருக்கக் கூடிய இடங்கள் சுத்தம், பூஜை அறை, சமையலறை என வீடு முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

எந்த ஒரு வீடு மிகவும் சுத்தமாக இருக்கிறதோ, அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்று கூறுவோம். அதாவது எந்த ஒரு பெண் தனது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாளோ, அவளே அந்த குடும்பத்தின் மகாலட்சுமி ஆவாள்.

அலுவலகத்திற்கு செல்லக்கூடிய பெண்ணாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கக்கூடிய பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த ஆறு முக்கியமான விஷயங்களை வீட்டில் கடைபிடிக்கும் பொழுது அந்தப் பெண்ணும், அந்த பெண் இருக்கக்கூடிய குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் இருக்கும்.