இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

Photo of author

By Parthipan K

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

மேலும், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷியா 130 பேருந்துகளை அனுப்பத் தயாராக உள்ளது என்று ரஷிய உயர்மட்ட இராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்களுக்கு உதவ ரஷியா தரப்பில் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக ரஷியா தெரிவித்தது. இதையடுத்து, ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் 130 பேருந்துகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்னல் ஜெனரல் கூறியதாவது:-

இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு குடிமக்களை மீட்பதற்காக மொத்தம் 130 பேருந்துகள் புறப்படத் தயாராக உள்ளதாகவும், இதைத் தவிர, சோதனைச் சாவடிகளில் தற்காலிக தங்குமிடம் மற்றும் ஓய்வுக்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அகதிகளுக்கு சூடான உணவு வழங்கப்படும் என்றும், அதை தவிர்த்து, நடமாடும் கிளீனிக்குகளும் அங்கு மருந்து கையிருப்புடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ரஷிய விமானங்கள் மூலம் தங்கள் நாட்டிற்கு புறப்படுவதற்காக பெல்கொரோட் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.