இதை மட்டும் செய்யவே மாட்டோம்! உக்ரைன் அதிபர் திட்டவட்டம்!!
உக்ரைன் மீது போர் தொடுத்து இன்று 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தீவிர தாக்குதலுக்கு அஞ்சி பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர். இதுவரை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளார்கள் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனின் ராணுவ நிலைகளே எங்கள் இலக்கு எனக் கூறி போரை தொடங்கிய ரஷிய படைகள் தற்போது போர் விதிமுறைகளை மீறி உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து அதன் மீது ரஷிய படைகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் புகார் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், போரை நிறுத்த உலக நாடுகள் பலவும் ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் அதை ஏற்காத ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக மீண்டும் ரஷியா அமைதி பேச்சுவார்த்தையை தொடர முன்வர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க சம்மதிக்காது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.