என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்
இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது என்று சி.விஜயபாஸ்கர் வீடு முன்பு இருந்த காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சி.வி. சண்முகம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில், வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெய்டு நடைபெறும் வீடுகளின் முன்பு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திற்கு சி.வி. சண்முகம் வந்தார். ஆனால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபப்பட்ட அவர்,காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது?” ‘சார் நான் விஜயபாஸ்கர் வீட்டிற்கு போகணும் என்று கூறினார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தை வீட்டிற்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களிலும் ,எஸ் .பி. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
விஜயபாஸ்கர் வீடு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்கவே சோதனை நடைபெறுகிறது . பால் விலை, சொத்துவரி மின்கட்டண உயர்வை மறைக்கவே சோதனை நடைபெறுகிறது. மின்சார கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயரப்போகிறது என்றும் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.