10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்படி அவர் பேசியதாவது, “கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு இலவச பேருந்து, மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் என மகளிருக்காக நிறைய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுள்ள பிரதமர் மோடி தமிழகத்திற்கு என்று எந்த நல்லதும் செய்யவில்லை. மாறாக நீட் தேர்வு மூலம் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பாஜக ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இப்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் அறிக்கையில் கூறியதுபோல நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடந்த 2021ஆம் ஆண்டு அடிமைகளை விரட்டியது போல அவர்களின் எஜமானர்களை விரட்ட வேண்டும். அதனால், ஆ.ராசாவை நீங்கள் தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென” கூறியுள்ளார்.