கோவிலுக்கு செல்லும் பொழுது, குறிப்பாக கடவுளை வணங்கும் பொழுது ஒரு சிலருக்கு கொட்டாவி மற்றும் அழுகை வரும். அவ்வாறு வந்தால் அதற்கு என்ன அர்த்தம்? கடவுளை எவ்வாறு சரியாக வணங்க வேண்டும்? கோவிலில் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் கோவில் கோபுரத்தை வணங்க வேண்டும். அதன் பிறகு கோவிலின் முன்புறம் இருக்கும் துவார பாலர்கள் மற்றும் துவார சக்திகளை வணங்க வேண்டும். அடுத்ததாக கோவிலில் இருக்கும் வழி பீடம் மற்றும் நந்தி பெருமானை வணங்க வேண்டும். அடுத்ததாக விநாயகரை வணங்கி விட்டு உள்ளே இருக்கும் கடவுளை வணங்க வேண்டும்.
கடவுளை வணங்கிய பின்னர் சிறிது நேரமாவது கோவிலில் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மன அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். கோவிலில் சிறிது நேரம் அமர்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி, நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். உடலில் இருக்கும் தீய சக்திகளும் விலகிவிடும்.
கடவுளை வணங்கும் பொழுது அனைவரும் கண்களை மூடி தான் வணங்குகிறார்கள். ஆனால் ஒரு ஐந்து நிமிடமாவது கண்களை திறந்து கடவுளின் திருமேனியை பார்க்க வேண்டும். கடவுளின் பாதத்தை பார்க்க தொடங்கி கடவுளின் திரு முடி வரை பார்க்க வேண்டும். கடவுளின் பிரகாரத்தை சுற்றி வளம் வந்து கடவுளை வணங்க வேண்டும்.
கோவிலில் அமர்ந்து இருக்கும் பொழுது பிறரைப் பற்றி குறை கூறுவதோ, தீய வார்த்தைகளை பயன்படுத்துவதோ கூடாது. கோவிலில் யார் மீதும் கோபம் கொள்ளாமல் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் குடும்ப கஷ்டங்களை நினைத்து கடவுளிடம் கூறி அழுவார்கள். அது போன்று அழுவதை தவிர்த்து விட்டு, கடவுளிடம் உங்களது கஷ்டங்களை வார்த்தைகளால் கூறி மன தைரியத்தை பெற்றுக் கொள்வது நல்லது.
ஆனால் இதுபோன்று இல்லாமல் ஒரு சிலருக்கு கடவுளை காணும் பொழுது அவர்களை அறியாமல் அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் வரும். அவ்வாறு வந்தால் கடவுளின் அருள் அவர்களுக்கு இருப்பதாக அர்த்தம். அதேபோன்று கடவுளை வணங்கும் பொழுது மணி ஓசை கேட்டால், உங்களது பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம்.
கோவிலில் கொடுக்கக்கூடிய மாலையை பயபக்தியுடன் வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை நிலை வாசலில் மாட்டி வைத்துக் கொள்ளலாம். ஆனால் தப்பி தவறியும் கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது.
கோவிலுக்குள் நுழைந்த உடன் ஒரு சிலருக்கு கொட்டாவி வரும். கொட்டாவி என்றால் கெட்ட ஆவி என்று பலரும் பயந்து கொள்வார்கள். ஆனால் அது உண்மை அல்ல. கோவிலில் கொட்டாவி வருவது, ஆன்மீக தூய்மை செய்யும் செயல்முறையாகும். நமது உடம்பில் சில நேரங்களில் நமக்கே தெரியாமல் சில எதிர்மறை அதிர்வுகள் இருக்கலாம்.
இந்த எதிர்மறை அதிர்வுகள் கோவிலில் இருந்து வரும் மந்திர ஒலி, தீப ஒளி, மங்கள ஒலி, நாத சக்தி ஆகியவற்றால் தூண்டப்பட்டு வெளியேற்றப்படும்.அந்த நேரத்தில் தான் நமக்கு கொட்டாவி வருகிறது. இந்த நேரத்தில் சிலருக்கு தலையில் வலியும், உடம்பில் களைப்பும் தோன்றும். இவை அனைத்தும் தீய சக்திகள் வெளியேறுவதற்கான அறிகுறிகள் தான். எனவே இதற்கு பயப்பட தேவையில்லை.