என்னது ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யுஸ்வேந்திர சாஹலா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் துரித முறையில் நடந்து வருகின்றன.
இந்தமுறை ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கின்றன. இதற்கிடையே இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த மெகா ஏலத்தில், தொடர்ந்து பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த யுஸ்வேந்திர சாஹலை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து, இந்தமுறை யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் அணியில் இணைத்துள்ள யுஸ்வேந்திர சாஹல் அந்த அணியின் டிவிட்டர் கணக்கில் அடுத்தடுத்து தனது பதிவுகளை இட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச் 16) யுஸ்வேந்திர சாஹல் ராஜஸ்தான் அணியின் டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ‘சாஹல்’ என பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சில நிமிடங்களில், “ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து தொடக்க வீரராக தான் களமிறங்க உள்ளதாகவும் சாஹல் இன்னொரு பதிவை பதிவிட்டுள்ளார்.” அவரின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.