உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலவித சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால் இந்த செயலியை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பல மோசடி செயல்களை செய்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். பல பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ‘Hi Mum’ எனும் மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மெசேஜ் வாட்ஸ் அப் பயனர்களுக்கு அனுப்பப்பட்டு நான் உங்களது மகள் அல்லது மகன் பேசுகின்றேன் என கூறி பணம் பறித்து மோசடி செய்துவிடுகின்றனர்.
இந்த மோசடி மூலம் இதுவரை 57 கோடி மதிப்பிலான பணம் பறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது, இன்னும் தாங்கள் ஏமாந்தது கூட தெரியாமல் சில வாட்ஸ் அப் பயனர்கள் இருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்றால் ஒரு வாட்ஸ் அப் பயனருக்கு ‘Hi mum’ or ‘Hi dad’ என்கிற வாட்ஸ் அப் செய்தி அனுப்பப்படுகிறது, இந்த செய்தியின் மூலமாக மோசடி கும்பல் தங்களை மகன் அல்லது மகளாக காட்டிக் கொள்கின்றனர். தங்களது மொபைலை தொலைத்துவிட்டதாகவும் அல்லது மொபைல் உடைந்துவிட்டதாகவும் அதனால் வேறு எண்ணிலிருந்து மெசேஜ் செய்வதாகவும் வாட்ஸ் அப் பயனர்களை மோசடி கும்பல் நம்ப வைக்கின்றனர். அதன் பிறகு அவர்களிடமே தங்களுக்கு பணம் வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து நடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.
தெரியாத எண்ணிலிருந்து வரும் செய்திகளை எச்சரிக்கையாக கையாளுங்கள், உங்களை தொடர்பு கொள்பவர் உறவினர், நண்பர் என அடையாளம் கட்டிக்கொண்டாலும் நீங்கள் அவர்களது எண்ணை சரிபார்த்து அதன் பின்னரே அவர்களுடன் பேச தொடங்குங்கள். தேவையற்ற லிங்குகளை க்ளிக் செய்வது, ஓடிபி அனுப்புவது, வங்கி தகவல்களை பகிர்ந்து கொள்வது, வாட்ஸ் அப்பை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற செய்திகள் வந்தால் புறக்கணித்து விடுங்கள், அப்போது தான் நீங்கள் மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.