தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எங்கே? தேடும் தொண்டர்கள்!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக வேட்பமனு தாக்கலானது இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்பமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 ஆம் தேதியாகும். மார்ச் 20 ஆம் தேதி வேட்பமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும், வேட்பமனுவை திரும்ப பெற மார்ச் 22 ஆம் தேதி தான் கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் எனவும்,மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன. அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியும்,அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் தனித்து போட்டியிடுவதாக கூறி வருகின்றன. அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் நீதி மைய்யம், நடிகர் சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருந்தாலும் அதிமுக, திமுக, மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் முதலில் கூட்டணியை உறுதி செய்த பாமக இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை என பாமக தொண்டர்கள் மத்தியிலேயே அதிருப்தி எழுந்துள்ளது.
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஹைடெக் பிரச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகபடுத்திய அன்புமணி ராமதாஸ் தற்போது வரை வீட்டை விட்டே வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய நாளை தவிர மீதி நாட்கள் பெரும்பாலும் இணைய வழியிலான கூட்டங்களில் மட்டுமே அவர் கலந்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் சுறாவளி சுற்று பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் நிலவும் பிரதான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ். ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வீட்டை விட்டே வெளியில் வராமல் இருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவராக கொரோனா பாதிப்பு குறித்து முதலில் அறிவுறுத்தியவர்கள் பாமகவின் இரு மருத்துவர்கள் தான். அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுக் கூட்டங்களை தவிர்க்கிறாரா? அல்லது முதல்வர் வேட்பாளராக கடந்த தேர்தலில் மக்களை சந்தித்து விட்டு தற்போது எப்படி பிரச்சாரத்திற்கு செல்வது என்ற தயக்கத்தால் தவிர்க்கிறார? என்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாமகவுடனான தொகுதி பங்கீடு மட்டுமே முடிவாகியுள்ளதால், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடவுள்ளது என்று இதுவரை முடிவு செய்யவில்லை. இதனால் கூட பாமக பிரச்சாரத்தை ஆரம்பிக்காமல் இருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.