கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. யார் பிரதமர் என தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது.
இந்த முறை இந்த 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு பெறமுடியவில்லை. 39 எம்.பி.க்கள் இருந்தும் ஒரு பலனும் இல்லை. பாராளுமன்றத்தில் பாஜகவை விமர்சிக்க மட்டுமே தமிழக எம்.பி.க்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்நிலையில்தான் தொகுதி மறுசீரமைப்பு என்கிற விஷயத்தை பாஜக அரசு அமுல்படுத்த நினைக்கிறது. அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்பட்ட ஒவ்வொரு மாநிலங்களிலும் பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் திட்டம் இது. இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், தொகுதி மறுவரையரை தொடர்பாக பல மாநில முதல்வர்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில், பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா எம்.பி. உள்ளிட்ட 7 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜய், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.