Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். வாரிசு படத்தில் நடிக்கும்போதே இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பின் முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.
அனேகமாக தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.
அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.
இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பில் விஜயும் இடம் பிடித்திருக்கிறார். சி-வோட்டர் என்கிற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 27 சதவீத வாக்குகளை பெற்று மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருக்க, 18 சதவீத இடத்தை பிடித்து விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும், 10 சதவீத இடத்தை பிடித்து எடப்பாடி பழனிச்சாமி 3வது இடத்திலும், 9 சதவீத வாக்குகளை பெற்று பாஜக தலைவர் அண்ணாமலை 4வது இடத்திலும் இருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒரே ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம்.