யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..??
விஜய் டிவியில் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்குகிறார். முன்னதாக செஃப் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில், அவர் விலகியதால், அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்நிலையில், இவர் யார்? சமையல் கலையில் இவருக்கு எந்த அளவிற்கு திறமை உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் மதம்பட்டி ரங்கராஜ். பிரபலங்கள் இல்ல திருமணம் என்றாலே இவரை தான் அழைக்கிறார்கள். சமீபத்தில் கூட பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் பட்டையை கிளப்பியது. எந்த திருமணத்திலும் சாப்பிடாத ரஜினி கூட இதில் சாப்பிட்டு விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அதனை தொடர்ந்து பென்குவின் என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அடிப்படையில் இவர் ஒரு சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். 25 ஆண்டுகளாக இந்த துறையில் பயணம் செய்து வருகிறார்.
தற்போது 41 வயதாகும் ரங்கராஜ் சிறுவயது முதலே சமையல் கலை மீது ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் அவர் பெற்றோரின் வற்புறுத்தலால் பொறியியல் படித்தார். இருப்பினும் அதில் விருப்பம் இல்லாததால், 1999 ஆம் ஆண்டு தனது குடும்ப தொழிலான சமையலை எடுத்து நடத்தினார். முதலில் பெங்களுரில் தனது உணவகத்தை தொடங்கினார்.
அதன் பின்னர் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி இன்று பிரபலங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் சமைக்கும் அளவிற்கு செலிபிரிட்டி கலைஞராக உயர்ந்துள்ளார். எனவே குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதற்கு அனைத்து தகுதியும் உடையவர் தான் இந்த மாதம்பட்டி ரங்கராஜ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.