கடந்த மாத இறுதியில் அதிமுக கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிப்படையாகவே மோதல் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின் பன்னீர்செல்வம் அவர்கள் பெரிய குளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு அவரை அவரின் அதிமுக தொண்டர்கள் நேரில் சந்தித்து சென்றுள்ளனர். இன்று காலை பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை வந்தடைந்துள்ளார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் “இதுவரை தனது முடிவுகள் தமிழக மக்கள் மற்றும் அதிமுக கட்சியின் நலனை கொண்டே இருந்துள்ளது, இனியும் அவ்வாறே இருக்கும்” என பதிவிட்டுள்ளார். நாளை முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிக்க இருக்கும் நிலையில் இன்று அதிமுக கட்சியில் பரபரப்பான ஆலோசனை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திரபாலாஜி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், வேலுமணி உள்பட சில முக்கிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரையும் அக்கட்சி அமைச்சர்களும், நிர்வாகிகளும் நேரில் சந்தித்து பரபரப்பான ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

