செங்கல்பட்டு மாவட்டத்தின் நடுவில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவில் உண்டியலில் தவறுதலாக தன்னுடைய ஐபோனை போட்ட பக்தரிடம் ஐபோனில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொண்டு ஐபோனை திரும்ப கொடுக்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும், தங்களுடைய போன் வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மாதவரம் நேரு தெருவில் இருக்கக்கூடிய அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு வந்த நிலையில், அவரிடம் இந்த நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
செய்தியாளர்களிடம் உண்டியலில் விழுந்த ஐபோன் குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருப்பதாவது :-
நான் இந்த செய்தியினை படித்தேன் என்று தெரிவித்த அவர், மேலும் இந்த செய்தி குறித்த முழு தகவலினையும் விசாரித்த பின் முடிவு மேற்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாது, பொதுவாகவே உண்டியலில் ஒரு பொருள் விழுகிறது என்றால் அது கடவுளுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஐபோனையும் அவ்வாறு தான் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.
ஒருவேளை சட்டத்தில் இதற்கு வேறு ஏதாவது வழி இருந்தால் அதனை கட்டாயமாக மேற்கொள்வோம் என்றும் சட்டத்தின் மூலம் அந்த பக்தருக்கு நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேக்கர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.