43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. கடைசியாக கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் பிரதமர் மோடி பயணிக்காத ஒரே வளைகுடா நாடாகவும் குவைத் இருந்து வந்தது.
கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி குவைத்திற்கு பயணிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் அந்தப் பயணம் நடைபெறாமல் போனது. இந்த நிலையில் தான் 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கும் வளைகுடா நாடான குவைத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி மேற்கொண்டு இருக்கும் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பயான் அரண்மனையில் தங்க வைக்கப்பட உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதோடு, பல்வேறு புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் தொழிலாளர் முகாமை பார்வையிட இருக்கும் பிரதமர் மோடி, 26 ஆவது அரேபிய வளைகுடா கோப்பை தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு சபை யின் தலைமையை குவைத் ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் அந்நியய செலவாணி அடிப்படையிலும் இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதால் பிரதமர் மோடியின் குவைத் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு குவைத்தின் பிரதமர் இந்தியா வருகை தந்திருந்ததே இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உயர் மட்ட சந்திப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.