மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? பதவியை எடுக்கும் அளவிற்கு என்ன பேசிவிட்டார்?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையிலிருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற குழப்பம் நீடித்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தன்னுடைய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னாள் ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய அமைச்சரவையை அடிக்கடி மாற்றி வருவார். தற்போது பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அவ்வாறு செய்யாமல் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் செயல்பட்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தவிட்டுள்ளார். எத்தனையோ பிரச்சனைகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிச்சாமி, மணிகண்டன் மீது கோபப்பட்டு பதவியை பறிக்க முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.
அதிமுகவின் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கேபிள் டிவி தலைவராகவும் பதவி வகிக்கிறார். சமீபத்தில் மக்கள் மத்தியில் பேசிய இவர் கேபிள் டிவி கட்டணத்தை 130 ரூபாயாக குறைத்துள்ளோம். இதை இன்னும் கூட குறைக்கலாம் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் தான் அரசு கேபிள் டிவி வருகிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் கேபிள் கட்டணதை குறைப்பது பற்றி தன்னிடம் முதல்வர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார். அப்போது கேபிள் டிவி கார்ப்பரேசன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உங்கள் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும் என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் இது குறித்து எனக்கே தெரியவில்லை. இது பற்றி முதல்வர் எதுவும் சொல்லவில்லை என்றார். மேலும் அரசு கேபிளில் மற்ற கேபிள் வைத்துள்ளோரை இணைக்க கூறும் உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும், அதில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளதாகவும் அதை அரசு கேபிளுடன் இணைப்பாரா என்றும் அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
ஒரே கட்சியில் இருந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய இவரது இந்த பேச்சுதான் முதல்வர் பழனிசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்தே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் முதல்முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மணிகண்டன் மட்டுமே. வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப துறையை கூடுதாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.