அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு

Photo of author

By Anand

அடுத்த தளர்வில் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி? வெளியாகும் அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது தமிழகத்தில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் அடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளில் 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைக்கு அனுமதியளிப்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பரவிவரும் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.குறிப்பாக பேருந்து சேவை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவியதால் நோய்த் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் அடுத்தடுத்து ஊரடங்கு கடும் கட்டுபாடுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நோய்த் தொற்றை கட்டுபடுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துவதன்  விளைவாக தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஊரடங்கு தளர்வுகள்:

இதன் விளைவாக கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

வகை 1: (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

வகை 2: (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3: (4 மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

இதன் அடிப்படையில் முதல் வகையில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த முதல் வகையிலுள்ள மாவட்டங்களுக்கு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.இரண்டாம் வகையில் ஓரளவு தொற்று கட்டுபடுத்தப்பட்ட 23 மாவட்டங்கள் உள்ளன, அதனால் இந்த மாவட்டங்களுக்கு சில குறிப்பிட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் வகையில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுமாவட்டங்களுக்கு அதிக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.தளர்வுகள் அறிவிக்கப்படும் போது அனைத்து மாவட்டங்களும் குறைந்த அளவிலாவது பேருந்து சேவையை எதிர்பார்த்தது. ஆனால் அரசு தொற்று பரவல் குறைந்துள்ள மூன்றாம் வகையில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதியளித்தது.

பேருந்து சேவை தொடங்கவுள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் ஜூன் 28 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து என்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் மருத்துவ குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறயுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கூடுதல் தளர்வுகள் என்னவென்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் ஓரளவு பாதிப்பு குறைந்துள்ள இரண்டாம் வகை பிரிவில் உள்ள 23 மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடங்குவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.