மீண்டும் ரோடு ஷோ நடத்தும் மோடி – பாஜகவிற்கு கைகொடுக்குமா?
தேர்தல் சமயங்களில் பாரதிய ஜனதா கட்சி அவர்களின் செல்வாக்கை காட்டுவதற்காக பிரதமர் மோடியை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துவது வழக்கம்.அந்த வகையில் இதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்துள்ளது.அவ்வளவு ஏன் தமிழகத்தில் கூட ஒரு முறை நடந்துள்ளது.
அதன்படி சமீபத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை நடைபெற்றது. இதுதான் தமிழகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் முதல் ரோடு ஷோ. ஆனால் இதற்கு பெரிய அளவில் உள்ளூர் மக்கள் கூட்டம் வரவில்லை. பாஜக தொண்டர்களும் வடமாநில தொழிலாளர்களும் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள்.
இந்த நிலையில் மோடியின் இரண்டாவது ரோடு ஷோ சென்னையில் நாளை நடைபெற உள்ளது.வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவதால், சென்னை பாண்டி பஜாரில் நாளை பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற உள்ளது.
முன்னதாக கோவையில் நடந்த ரோடு ஷோ போல இந்த முறை சொதப்பி விடக்கூடாது என்பதற்காக எப்படியாவது சிறப்பாக நடத்திவிட வேண்டுமென பாஜகவினர் அதிகம் மெனக்கெட்டு வருகிறார்கள்.திநகர் பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை இந்த ரோடு ஷோ நடைபெற உள்ளது.
இதனை முடித்துவிட்டு அன்றைய தினம் மாலை கோவைக்கு செல்லும் பிரதமர் மோடி அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார்.பின் மீண்டும் டெல்லி செல்லும் இவர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு வந்து பெரம்பலூர் மற்றும் விருதுநகர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.மோடியின் இந்த செயல்கள் தமிழகத்தில் எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்று பார்க்கலாம்.