கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜி மனுவிற்கு பதில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் இன்னும் எம்.எல்.ஏ., பொறுப்பில் உள்ளதால் அதிகாரமிக்க நபராகவே உள்ளார். எனவே வழக்கின் சாட்சியங்களை அழிக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஜாமீன் வழங்க கூடாது” என கூறியுள்ளனர்.
அதேசமயம் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கிட்டத்தட்ட 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே வழக்கில் தாமதம் செய்வதற்காக கடைசி நேரத்தில் அமலாக்கத்துறையினர் பதில் மனுவை தாக்கல் செய்திருப்பதாக குற்றம் சாட்டினார்கள். உடனே நீதிமன்றம் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தது. உடனே அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 18 ஆம் தேதியில் இருந்து ஜூலை 7 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை. எனவே ஒருவேளை மே 6ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால், அவர் கோடை விடுமுறை முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.