தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!!
வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் இன்னும் முடியவில்லை. கிட்டத்தட்ட 17 மாதங்களாகியும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் அப்பகுதி மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் கூட வாக்களிக்கவில்லை. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
ஏனெனில் அந்த தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட பின்னர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது தான் அதில் மாட்டு சாணம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இது மனிதநேயமற்ற மற்றும் மனிதத்தன்மையற்ற செயல் என கூறியுள்ளார். மேலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும் வேதனையும் அளிக்கிறது. இந்த கொடுமைகள் தொடர்ந்து நடக்கும் நிலையில் தமிழக அரசு அதை தடுக்க தவறிவிட்டது.
வேங்கைவயல் விவகாரம் எந்த அளவிற்கு கொடூரமானதோ அதே அளவிற்கு இதுவும் கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மன்னிக்க தகுதியற்றவர்கள். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.