முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல லட்சம் மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பங்களை தயாரிக்க கூடியவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை நேரில் சென்று தங்களுடைய விண்ணப்பங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களில் சில தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் படி,
✓ குடும்ப தலைவி இல்லாத அப்பா, மகன் மற்றும் மகள் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு அந்த அட்டையில் இருக்கக்கூடிய மகளுக்கு 21 வயது நிரம்பிய நிலையில் அவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ ஒருவேளை குடும்பத் தலைவி இல்லாத வீட்டில் 2 அல்லது 3 மகள்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் அதில் மூத்த மகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ அதேபோன்று, விவாகரத்து பெற்று பிரிந்த மகளிர்க்கும் உரிமை தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரே வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு பேர் திட்டத்தின் கீழ் பயன்பட முடியாது என்றும் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது என திட்டவட்டமாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.