இந்தியா: ஜம்மு&காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் நடுவே உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே பாலம் 2021-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 2022-இல் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தார்கள்.
ஜம்மு&காஷ்மீரின் உடகட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் அவசியம். இந்தப் பாலத்தின் மூலம் ஜம்மு &காஷ்மீரில் உள்ள சிறு சிறு ஊர்களையும் இணைக்க முடியும். தற்போது இதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
467 மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டர். பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரின் உயரம் 324 மீட்டா். அதைவிட இந்த பாலம் 35 மீட்டர் உயரமாகவே உள்ளது. இதில் 14 மீட்டர் பகுதி இரண்டு பக்க பாலமாக இருக்கும். இரண்டு ரயில்கள் செல்லும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லாந்து மற்றும் ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் கட்டப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல், நிலநடுக்கம் ஆகியவற்றில் கூட இது வலுவாக இருக்கும். மேலும், அதிகபட்சமாக மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும் அளவிற்கு கட்டப்பட்டு வருகிறது.
50 சதவிகிதத்திற்கும் மேலாக முடிக்கப்பட்ட இந்த பாலத்தின் முழு வேலையும் 2021 ஆம் ஆண்டில் நிறைவுபெறும். 2022-இல் நாட்டின் பிற பகுதிகள் முதன் முறையாக ரயில் போக்குவரத்து மூலம் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கப்பட்டுவிடும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் அமையும் ரயில் வழித்தடத்தின் பாதையின் சில பகுதிகளில் பணிகள் நிறைவடைந்து அவை ஏற்கெனவே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. இப்போது கட்ரா முதல் பனிஹால் வரையிலான 111 கி.மீ. தொலைவு பகுதி மட்டும் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாதையின் 174 கி.மீ. தூர சுரங்க வழிப் பாதையில், 126 கி.மீ. தூரப் பணிகள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன.
கடந்த ஓராண்டு காலமாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2022 டிசம்பரில் காஷ்மீரின் ரயில் போக்குவரத்து முழுமை பெறும் என்று மத்திய அரசின் அதிகாரிகள் கூறினர்.